search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்த ஊழியர் பலி"

    திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒப்பந்த ஊழியர் மீது மின்கம்பம் இடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருத்துறைப்பூண்டி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிக்காக கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சென்னை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து மின்ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் ஊராட்சி எக்கல் வினோபா கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மின்சாரம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மின் கம்பங்களை தூக்கும் கிரேன் வாகனத்தை ஆறுமுகம் என்பவர் ஓட்டியுள்ளார். கிரேன் மூலம் தூக்கி சென்ற மின்கம்பங்கள் மீது கோயம்புத்தூர் திருமலைபாளையம் சர்ச் காலனி ஊமைத்துரை தெருவை சேர்ந்த ஒப்பந்த மின் ஊழியர் டேவிட்(வயது 38) அமர்ந்து சென்றார். அப்போது ஒரு திருப்பத்தில் திரும்பியபோது கிரேனில் இருந்து டேவிட் கீழே விழுந்தார். அவர் மீது மின்கம்பம் இடித்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், டேவிட் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து பள்ளங்கோவில் கோட்ட துணை பொறியாளர் உமாமகேஸ்வரி, இணை மின் பொறியாளர் குமார், ஆடலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். உயரிழந்த டேவிட்டுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 

    இதேபோல கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுபாளையத்தில் மின்சார சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி முத்துக்குமார் என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    ×